பழனி: பள்ளத்தில் கார் கவிழ்ந்து கைக்குழந்தை உள்பட 3 பேர் பலி

விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மஞ்சுளா (38), குழந்தை அணியா ஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பழனி: பள்ளத்தில் கார் கவிழ்ந்து கைக்குழந்தை
உள்பட 3 பேர் பலி
Published on

பழனி,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நலகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 33). இவர், தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தார். அதன்படி நேற்று தனது மனைவி சொப்னா (24) மற்றும் மஞ்சுளா (38), 7 மாத கைக்குழந்தை அணியாஸ்ரீ உள்ளிட்ட உறவினர்களுடன் சித்தூரில் இருந்து காரில் புறப்பட்டார். காரை அதே பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன் (28) என்பவர் ஓட்டினார்.

கரூர், திண்டுக்கல் வழியாக வந்த இவர்கள், நேற்று காலை ஒட்டன்சத்திரம் வந்தடைந்தனர். பின்பு அங்கிருந்து திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச் சாலையில் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். சத்திரப்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிக்கெட்டு ஓடி சாலையோர ஓடை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மஞ்சுளா (38), குழந்தை அணியா ஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அண்ணாதுரை, சொப்னா மற்றும் உறவினர்களான பாஸ்கரன் (26), வனிதா (44), டிரைவர் ஹேமச்சந்திரன் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் இறந்தார்.

பின்னர் அணியாஸ்ரீ, மஞ்சுளா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com