

திண்டுக்கல்,
பழனியில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர், பத்திர எழுத்தரை காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
பழனியில், தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் இருக்கிறது. அந்த நிலம் 2 பேருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். அதோடு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.
அதையடுத்து திண்டுக்கல்லை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி மற்றும் வக்கீல் அன்வர்தீன், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜாமீன் கேட்டு 6 பேரும் தாக்கல் செய்த மனுவை, திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் மாவட்ட கோர்ட்டில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி ஆனது. மேலும் முருகதாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று (புதன்கிழமை) மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதனால் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக திண் டுக்கல் 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் பழனி நில மோசடி விவகாரம் தொடர்பாக ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் ஜெயபிரகாசை சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்று மாலை 5.30 மணி வரை காவலில் வைத்து விசாரிக்க திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் பாக்யராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும், மேலும் சிலர் சிக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.