

பழனி,
பழனி மடம் நில மோசடி வழக்கில் 90 நாட்களுக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் 35 சென்ட் நிலத்தை மோசடியாக விற்பனை செய்து பதிவு செய்ததாக தொடரப்பட்ட திண்டுக்கல் சிபிசிஐடி குற்ற எண் 02/2026 வழக்கில், 24.10.2026 அன்று சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பூர்வமான 90 நாட்கள் காலக்கெடுவிற்குள் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1888ஆம் ஆண்டு தர்ம சாசனத்தின் மூலம் மடத்தின் சமய மற்றும் அறப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்நிலத்தின் வழிகாட்டி மதிப்பு சுமார் ரூ.16 கோடி ஆகும். ஆனால், இந்நிலத்தை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதற்கான பத்திரம் தயாரிக்கப்பட்டு, இந்து சமய அறநிலைய துறையின் மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோதும் பதிவு செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
சிபிசிஐடி மேற்கொண்ட விரிவான விசாரணையில் 160-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள், தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இதன் அடிப்படையில் முருகதாஸ், சேதுபதி. வெள்ளைத்துரை. ஜஸ்டின் மணிகண்டன் (சார்பதிவாளர் - பணியிடை நீக்கம் ) மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய ஐந்து நபர்களுக்கு எதிராக 24.10.2026 அன்று குற்றப்பத்திரிகை மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட அன்வர்தீன் 07.08.2026 அன்று உயிரிழந்ததால், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன. மேலும், தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் தொடர்பான அம்சங்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விரிவான புலனாய்வு, ஆதாரங்களின் முறையான ஆய்வு மற்றும் சட்டப்பூர்வ காலக்கெடுவிற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கில் சிபிசிஐடி தனது திறமையான மற்றும் விரைவான விசாரணையை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.