

கடவுள் முருகரின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி முருகன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து முருகனை வழிபடுவது வழக்கம். இதனால் எப்போதும் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளியூர்,வெளிநாடுகளில் இருந்து பழனிமுருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அது மட்டுமின்றி கோயில்களில் பக்தர்களுக்காக பல்வேறு கட்டணம் வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, சிறப்புக் கட்டண தரிசனம், பூஜைப் பொருட்கள், பஞ்சாமிர்தம், பிரசாதங்கள் விற்பனை, தங்க தொட்டில், தங்க ரத புறப்பாடு உள்ளிட்ட கட்டண சேவைகளின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் மலைக்கோயில் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது அதில். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை பசலி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. இதனடிப்படையில், 2025 ஜூலை முதல் 2026 ஜூன் மாதம் வரையிலான கடந்த ஓராண்டில் பழனி கோவில் வரலாற்றிலேயே நடப்பு பசலி ஆண்டான 1435ம் ஆண்டு ரூ.103 கோடியை தாண்டி கிடைத்துள்ளது.
இந்த வருவாய் ஆண்டு கிடைத்த மொத்த வருவாய் ரூ.103 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 525 ஆகும். இதில் பஞ்சாமிர்தம் விற்பனையில் ரூ.63 கோடியே16 லட்சத்து 7 ஆயிரத்து 320 கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற பசலி ஆண்டு வருமானத்தில் 1430-ம் பசலி ஆண்டில் ரூ.15 கோடியே 28 லட்சத்து 94 ஆயிரத்து 560ம், 1431-ம் பசலி ஆண்டில் ரூ.41 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 755ம், 1432-ம் பசலி ஆண்டில் ரூ.80 கோடியே 62 லட்சத்து 20 ஆயிரத்து 267ம், 1433-ம் பசலி ஆண்டில் ரூ.86 கோடியே 06 லட்சத்து 06 ஆயிரத்து 774ம், 1434ம் பசலி ஆண்டில் ரூ.97 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரத்து 918 கிடைத்தது.