பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகிறது - அமைச்சர் சேகர்பாபு

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகிறது - அமைச்சர் சேகர்பாபு
Published on

சென்னை,

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டுவரும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், திருப்பதி கோவிலுக்கு நெய் விநியோகம் செய்த நிறுவனமே பழனி கோவிலுக்கும் விநியோகித்து வருவதாக தகவல்கள் பரவியது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து அவர் பேசியதாவது;

"கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்துதான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகிறது.

தேவைக்கு அதிகமாக நெய் தேவைப்படும்போது தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுகிறது. அந்த தனியார் நிறுவனம், தற்போது புகாருக்குள்ளான நிறுவனம் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜகவினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com