பழனி: புகாரளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறல்- காவல் உதவி ஆய்வாளர் நிரந்தர பணிநீக்கம்

கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த துறைரீதியான விசாரணையின் முடிவில், எஸ்.ஐ. ராஜகோபால் மீதான அத்துமீறல் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
பழனி: புகாரளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறல்- காவல் உதவி ஆய்வாளர் நிரந்தர பணிநீக்கம்
ராஜகோபால்
Published on: 

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புகாரளிக்க வந்த இளம்பெண்ணிடம் செல்போன் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக அத்துமீறிய குற்றச்சாட்டில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் மூலம் ஆபாசக் குறுஞ்செய்திகள்

பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கடந்த மே மாதம் 23-ம் தேதி அடிதடிப் பிரச்சினை தொடர்பாக புகாரளிக்க பழனி தாலுகா (நெய்காரப்பட்டி) காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ராஜகோபால், புகாரளிக்க வந்த அந்த பெண்ணின் செல்போன் எண்ணைப் பெற்று, வாட்ஸ்அப் மூலம் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.

பணியிடை நீக்கமும் விசாரணையும்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் உயரதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மே 24-ம் தேதி முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதில் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் இருந்ததால், எஸ்.ஐ. ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து அவர் மீது துறைரீதியான விரிவான விசாரணை நடைபெற்று வந்தது.

ஐ.ஜி. அதிரடி உத்தரவு

கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த துறைரீதியான விசாரணையின் முடிவில், எஸ்.ஐ. ராஜகோபால் மீதான அத்துமீறல் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதனையடுத்து, காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, அவரைக் காவல் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து தென் மண்டல ஐ.ஜி. விஜேந்திர பிதாரி நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X