

திண்டுக்கல்
பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை ஆகஸ்டு 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ரூ.100 கோடி மதிப்பிலான தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் 1.35 ஏக்கர் நிலம், ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 1980-ம் ஆண்டில் நில உரிமையாளர் குப்புசாமி மணியக்காரர் குடும்பத்தார்கள், சிபிசிஐடி அலுவலகத்தில் மூலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இதனை தொடர்ந்து, 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்ற விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 6-ந்தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் அந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு கிரையம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் கோவில் சொத்து என்பதை மறைத்து தனிநபர்களுக்கு கிரையம் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, பழனி கவுண்டன்குளம் ஏ.சி.சி சாலை பகுதியை சேர்ந்த அன்வர்தீன், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த பாப்பான்குளம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை, விழுப்புரம் மாவட்டம் சாலமேடு காமராஜர் நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான முருகதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில், பழனி டி.கே.என் புதூர் பகுதியை சேர்ந்த சேதுபதி என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 4 பேரையும் ஆகஸ்டு 12-ந்தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.