பழனி தைப்பூச விழா: என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..? கோவில் நிர்வாகம் விளக்கம்

தைப்பூச திருவிழாவின் போது கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி தைப்பூச விழா: என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..? கோவில் நிர்வாகம் விளக்கம்
Published on

மதுரை,

திண்டுக்கல் மாவட்ட இந்து ஆலய பாதுகாப்பு இயக்க துணை தலைவர் சுவாமிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. 1-ந் தேதி தைப்பூசம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது.

இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். இதனால் ஏற்படும் அசம்பாவிதத்தை தடுக்க போலீசார், கோவில் நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதிய உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். சண்முகா நதி, இடும்பன் குளத்தில் பக்தர்கள் நீராட பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும். அங்கு பக்தர்கள் விட்டுச் செல்லும் துணிகளை அகற்றவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பழனி கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த பதில் மனுவில், பழனி கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தைப்பூச திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளை செய்து உள்ளது. மனுதாரர் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து உள்ளார்.

திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பழனிக்கு வரும் முக்கிய சாலைகளில், பக்தர்களின் வசதிக்காக 11 நிரந்தர காவடி மண்டபங்களை (குளியலறை, கழிப்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதி) இலவசமாக அமைத்து உள்ளோம். இவற்றை பராமரிக்க சுழற்சி முறையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தைப்பூச திருவிழாவின் போது கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்குகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாவலர்களை நியமித்து உள்ளோம். கூடுதலாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

சண்முகாநதி, இடும்பன்குளத்தில் பக்தர்கள் புனித நீராட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சண்முகா நதியில் இருந்த அமலை செடிகள் அகற்றப்பட்டு உள்ளன. தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படாதவாறு, விரைவாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுகிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த பதில் மனுவில் கூறியிருந்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி, திருவிழாவில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், ஆற்றில் புனித நீராடும் பக்தர்களை ஒழுங்குபடுத்துதல், தூய்மைப் பணியில் மனுதாரர் மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு உதவ வேண்டும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com