

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் கிராமத்தில் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 119-வது ஆண்டு பெருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் ஆடம்பர சப்பர பவனி நேற்று முன்தினம் இரவு வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஆரோக்கிய மாதா சொரூபம் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தின் பங்குதந்தை ஜெயராஜ் சப்பரத்தை இழுத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஆலய தலைமை காரியஸ்தர், இறை மக்கள் மற்றும் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை இழுத்து சென்றனர். சப்பரம் முக்கிய வீதிகளின் வழியாக பவனியாக சென்று மீண்டும் நிலையம் வந்தடைந்தது. ஆண்டு பெருவிழா திருப்பலி நேற்று காலை 8 மணிக்கு நடைபெற்று பெருவிழா நிறைவு பெற்றது.