

விழுப்புரம்,
விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ரங்கநாதன், ரமேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர் ஹரி ஹரசுதன், முதுகலை மாணவர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஏரிக்கரையின் கிழக்கு பகுதியில் வயல்வெளியின் நடுவில் பெரிய கிணறுக்கு அருகே வேப்பமரத்தின் கீழே பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்த சிற்பம், 135 செ.மீ. உயரமும், 87 செ.மீ. அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்பு சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. தலையில் மகுடமும், காதுகளில் பத்ரகுண்டலமும் காட்டப்பட்டுள்ளது. வலது கரத்தில் தாமரை மொட்டினை ஏந்தியவாறும், இடதுகரம் குடத்தை தொட்டவாறும், வலது காலை அகற்றி சற்று மடித்த நிலையிலும், இடது காலை அகற்றி தாமரைப்பீடத்தில் வைத்தவாறும் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது.
முகம், மார்பகம், வயிறு, வலது கரம் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. மூத்ததேவி சிற்பத்தின் வலதுபுறத்தில் மகன் மாந்தனும், இடதுபுறத்தில் மகள் மாந்தியும், வலதுபுறத்தில் காக்கை கொடியும் காட்டப்பட்டுள்ளது. கழுதை வாகனம் காட்டப்படாமல் எளிமையான கிராமிய கலைப் பாணியில் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்பட்டு கிராமத்தை சுற்றி 5-க்கும் மேற்பட்ட பல்லவர் கால சிற்பங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் இந்த ஊர் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஊராக விளங்கி இருக்கிறது என்பது தெளிவாகிறது. இவ்வாறு கூறினர்.