பனை மரம் ஏறும் கருவி செயல்முறை விளக்கம்

தூத்துக்குடி அருகே பனை மரம் ஏறும் கருவி செயல்முறை விளக்கத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
பனை மரம் ஏறும் கருவி செயல்முறை விளக்கம்
Published on

தூத்துக்குடி,

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் எளிதாக பனை மரம் ஏறும் வகையில் புதிய கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருவியின் செயல்பாடு குறித்த செயல்விளக்க முறைகள் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பனையேறும் கருவி செயல்படும் விதத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அட்மா திட்டத்தின் கீழ் மானிய விலையில் பனை மரம் ஏறும் கருவியை பயனாளிகளுக்கு வழங்கினர்.

பாதுகாப்பு

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

பனை தொழிலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் வேளாண்மை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய பனைகள் வளர்ப்பு, பனைகளை பாதுகாப்பது முக்கியமாக கூறப்பட்டு உள்ளது. தற்போதைய சூழலில் பனை ஏறுவதற்கே அதிகமாக தயக்கம் உள்ளது. அதில் உள்ள ஆபத்தை நினைத்து பல இளைஞர்கள் இந்த தொழிலுக்கு வருவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்கள் தயாரிப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பல இடங்களில் பனை ஓலைகள் காய்ந்து பனை மரங்கள் பட்டுப்போகும் நிலை உள்ளது.

இந்த நிலையில் தென்னை மரம் ஏறுவதற்காக ஒரு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த எந்திரத்தில் மாற்றம் செய்து புதிய எந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. பனை தொழிலை பாதுகாப்பாக செய்வதற்காக இந்த எந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com