பாம்பன் புதிய ரெயில் பாலம் அடுத்த மாதம் திறப்பு?

பாலத்தின் மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தை வடிவமைக்கும் பணி கடந்த 4 மாதத்துக்கு மேலாக நடந்தது.
பாம்பன் புதிய ரெயில் பாலம் அடுத்த மாதம் திறப்பு?
Published on

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள 105 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரெயில் பாலத்தின் அருகிலேயே ரூ.550 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக கடலுக்குள் மொத்தம் 333 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. மண்டபத்தில் இருந்து மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலம் அமையும் இடம் வரையிலும் கடலுக்குள் 1 கி.மீ. தூரத்துக்கு தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் மீது தண்டவாளம் பொருத்தும் பணிகளும், பாலத்தின் ஓரப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பொருத்தும் பணியும் முடிவடைந்துள்ளன. இதனிடையே மையப்பகுதியில் அமைய உள்ள தூக்குப்பாலத்தை பாம்பன் பாலத்தின் நுழைவு பகுதியில் வைத்து வடிவமைக்கும் பணி கடந்த 4 மாதத்துக்கு மேலாக நடந்தது. இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் பாலம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி பா.ஜனதா கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளர் முரளிதரன் கூறுகையில், "பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) தமிழகம் வருவதாகவும், அப்போது பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தை அவர் திறந்து வைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தேதி எப்போது என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்து விடும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com