வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எம்.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து (வயது 51). எம்.கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வன்னிகுடி கிராமத்தில் குடிநீர் இணைப்பு வழங்க பிரபாகரன் என்ற ஒப்பந்தகாரர் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் உடனடியாக பணிகளை நிறுத்தி உள்ளார். இது குறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, அவரது மனைவி தேவி (45), மகன் தினேஷ்குமார் (26) மற்றும் வெங்குசாமி (56) ஆகியோர் அங்கு சென்று தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது அந்த வழியாக வன்னிகுடி கிராமத்தைச் சேர்ந்த டாஸ்மாக் விற்பனையாளர் அய்யனார் (42) சென்றுள்ளார். அவர் அங்கு நடந்த தகராறை செல்போனில் படம் எடுத்துள்ளார். இதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, அவரது மனைவி தேவி, தினேஷ்குமார், வெங்குசாமி உள்ளிட்டோர் தன்னையும், உடன் இருந்த சத்தியேந்திரனையும் தாக்கியதாக அய்யனார் மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அய்யனார் கொடுத்த புகாரின்பேரில் மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன் விசாரணை நடத்தி, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்துவை கைது செய்தார்.

இதே போல் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் அய்யனார், மற்றொரு மாரிமுத்து, மலைராசு, சத்தியேந்திரன் ஆகிய 4 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனார் தரப்பை சேர்ந்த மாரிமுத்துவை கைது செய்தனர். அய்யனார் தரப்பு தாக்கியதாக ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி தேவி, வெங்குசாமி ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com