

காஞ்சிபுரம்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம் பஞ்சாயத்திற்கான தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார், மருமகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த பஞ்சாயத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி சத்யா மற்றும் தாயார் மதுரம் ஆகியோரை அவர் தேர்தலில் முன்னிறுத்தியுள்ளார்.
இதற்கான வேட்புமனுவையும் இன்று உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளனர். மாமியார், மருமகள் இருவரும் ஒன்றாக வந்து மனுத்தாக்கல் செய்தனர். ஒரே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மாமியார், மருமகள் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.