

வந்தவாசி
பலத்த மழையால் வந்தவாசி அருகே அரசு பள்ளி வளாகம் குளமாக மாறியதால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது.
இதன் காரணமாக அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி குளமாக மாறியது. வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாத நிலை உள்ளது.
இதனால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்தோடு வகுப்பறைக்கு தண்ணீரில் இறங்கி செல்கின்றனர். தேங்கிய தண்ணீரில பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் காணப்படுவதால் அவர்கள் ஆபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே போர்க்கால அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியிலிருந்து தண்ணீர் வடியவும் இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.