கிலோ ரூ.50-க்கு விற்பனையாகும் பன்னீர் திராட்சை... போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை!

தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக திராட்சை விளைச்சல் குறைந்துள்ளது.
பன்னீர் திராட்சை
Published on: 

கம்பம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பன்னீர் திராட்சைக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பன்னீர் திராட்சை

தேனி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கம்பம், புதுப்பட்டி, ஊத்துக் காடு, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, தென்னை மற்றும் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி முக்கிய இடம் பிடித்துள்ளது. இப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெறுகிறது.

இங்கு விளையும் கருப்பு பன்னீர் திராட்சைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் திராட்சை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளையும் திராட்சைகளை வியாபாரிகள் தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் செய்து, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

விவசாயிகள் கவலை

இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக திராட்சை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு திராட்சை வரத்தும் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ திராட்சை ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு போதிய லாபத்தை அளிக்காததால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து திராட்சை விவசாயிகள் கூறியதாவது:-

ரூ.50-க்கு கொள்முதல்

'கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக ராயப்பன்பட்டியில் திராட்சை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், திராட்சைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. உரம், பூச்சி மருந்து, தொழிலாளர்களின் கூலி என அனைத்து செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால், தற்போது ஒரு கிலோ திராட்சை ரூ.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் நெல்லுக்கு கொள்முதல் நிலையம் அமைத்திருப்பது போல் திராட்சைக்கும் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X