முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்

முருகன் கோவில்களில் நேற்று பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்
Published on

பழனி,

தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரத்திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காவடி எடுத்தும், பாத யாத்திரையாக வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நடந்து வரும் பங்குனி உத்திர விழாவையொட்டி நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம்

அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" "வீரவேல் முருகனுக்கு அரோகரா" என்று சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூரில்...

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பாத யாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். நேற்று இரவு கோவிலில் குமரவிடங்க பெருமானுக்கும்- வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com