விவசாயி வீட்டின் மேற்கூரையில் மற்றொரு துப்பாக்கி குண்டு கிடந்ததால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே விவசாயி வீட்டின் மேற்கூரையில் நேற்று மற்றொரு துப்பாக்கி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயி வீட்டின் மேற்கூரையில் மற்றொரு துப்பாக்கி குண்டு கிடந்ததால் பரபரப்பு
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் மருதடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் மலையடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு, காவல்துறையினர் அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஈடுபட்டபோது மலையின் பின் பகுதியில் ஈச்சங்காடு என்ற இடத்தில் உள்ள சுப்பிரமணி என்ற விவசாயி வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் ஆஸ்பெஸ்டாஸ் சீட் சேதமடைந்தது.

விசாரணை

விசாரணையில், திருச்சி மண்டல ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 48 பேர், 4 விதமான துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதும், அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய ஒரு குண்டு சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தியதும் தெரிய வந்தது.

மேலும், அந்த துப்பாக்கி குண்டு பயிற்சி தளத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விவசாயி வீட்டின் மீது விழுந்தது எப்படி?, அது, எந்த வகையான துப்பாக்கி குண்டு?, எவ்வளவு திறன் வாய்ந்தது? என்று விசாரணை நடத்தப்பட்டது.

மற்றொரு துப்பாக்கி குண்டு

இந்தநிலையில் நேற்று அதே சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையில் மற்றொரு துப்பாக்கி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கைப்பற்றிய போலீசார் அதனை தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு

விவசாயி சுப்பிரமணி வீட்டின் மேற்கூரையை துளைத்த துப்பாக்கி குண்டு சம்பந்தமாக நாரணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில், பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com