

பனியன் பேக்டரி லேபர் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் திரளானவர்கள் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் பனியன் தொழிலில் வெளிமாவட்ட, வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் புலம் பெயர்ந்து வந்து பணியாற்றி வருகிறார்கள். தன்னலம் பாராத உழைப்பின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியின் காரணமாக ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம் கோடி வரை அன்னிய செலாவணியை ஈட்டித்தருகிறது. இதன் மூலம் அரசு பயன்பெறுகிறது.
அதற்கு காரணமான பனியன் தொழிலாளர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் வாடகை கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு அரசு இடமோ அல்லது வீடோ வழங்க வேண்டும் என்று தொடர்ந்து எங்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் இதுவரை ஆயிரக்கணக்கானோர் வீடு இல்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு வேறு எங்கும் இடமோ, வீடோ இல்லை.
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதிகளில் வாடகை வீட்டில் சிரமப்பட்டு வசித்து வரும் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் மனுதாரர்களுக்கு வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் நேற்று 937 பேருக்கு வீடு வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.