பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா: பூச்சாட்டுதலுடன் இன்று தொடக்கம்

சத்தி அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா, பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது.
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா: பூச்சாட்டுதலுடன் இன்று தொடக்கம்
Published on

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து குண்டம் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்குகிறது.

இதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் சப்பரங்கள் வீதி உலா தொடங்கும். சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு கிராமங்கள் வழியாக சப்பரங்கள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். திருவீதி உலாவை முடித்துக்கொண்டு 15-ந் தேதி சப்பரங்கள் கோவிலை வந்தடையும். பின்னர் அன்று இரவில் குழிகம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கும்.

அதைத்தொடர்ந்து 22-ந் தேதி அதிகாலை 4 மணி அளவில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். தொடர்ந்து 23-ந் தேதி இரவு புஷ்ப ரதமும், 24-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. 28-ந் தேதி நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா முடிவடைகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com