

சென்னை
தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், போடி எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன் மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், போடி நகர செயலாளர் பழனிராஜ் உள்ளிட்ட பலரும் கையில் பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன 55 வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை / தி.மு.க. ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. மக்களின் கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றி உள்ளது. தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பியதால் தி.மு.க. வெற்றி பெற்றது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயார். நான் இருக்கும் போது நிதி துறை செயலாளராக இருந்தவர் தான் இப்போதும் இருக்கிறார் அவருக்கு தெரியும் என கூறினார்.
அதே போல் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டார். தி.மு.க அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.