

பாப்பிரெட்டிப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த எலந்த கொட்டப்பட்டியை சேர்ந்த சேட்டு மகன் விக்னேஷ் (வயது 23), அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் மதன்குமார் (19). சங்கர் மகன் சுந்தரம் (23).. இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று மாலை விக்னேசின் மோட்டார் சைக்கிளில் பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் எலந்த கொட்டப்பட்டிக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார். 3 பேரும் சாமியாபுரம் கூட்ரோட்டில் இருந்து அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் குமரகோட்டம் பகுதியில் கோதுமை மில் அருகில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் விக்னேஷ் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் தலையில் பலத்த காயம் பட்ட விக்னேஷ், மதன்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். சுந்தரம் காயத்துடன் உயிருக்கு போராடினார். அங்கிருந்தவர்கள் உடனடியாக சுந்தரத்தை மீட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தில் இறந்த விக்னேஷ், மதன்குமார் ஆகிய 2 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த மதன்குமார் ஏற்கனவே விபத்தில் கால் முறிந்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.