கோவையில் ரூ.10 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம்

ரூ.1.50 கோடியில் சர்வதேச கபடி உள்விளையாட்டு மைதானம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோவையில் ரூ.10 கோடியில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம்
Published on

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து உரிய பயிற்சி அளித்து தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து வெற்றிகளை பெறச்செய்து மாநிலத்துக்கு பெருமை சேர்த்து வருகிறது.

அந்த வகையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் ஆக்கி வீரர்கள் பயன்பெறும் வகையில் ரூ.9.67 கோடியில் ஆக்கி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே மாநகராட்சி விளையாட்டு திடலில் ரூ.1.95 கோடியில் கைப்பந்து உள்விளையாட்டு மைதானம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது.

அதே பகுதியில் ரூ.1.50 கோடியில் சர்வதேச கபடி உள்விளையாட்டு மைதானம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநகராட்சி சார்பில் மேற்கு மண்டலம் 33-வது வார்டு ஜீவாநகரில் 1.10 ஏக்கர் பரப்பளவில் ரூ.9.90 கோடியில் மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலகத்தரத்தில் பாரா ஒலிம்பிக் பல்வேறு விளையாட்டு வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் கூறியதாவது:-

பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டி என்பது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் மிக உயரிய பன்னாட்டு விளையாட்டு போட்டி ஆகும். இதில் உள்விளையாட்டு போட்டிகளான மேஜை பந்தாட்டம், உட்கார்ந்த நிலையிலான கைப்பந்து, சக்கர நாற்காலி கூடைப்பந்து, பூப்பந்து போன்ற போட்டிகளும், வெளிப்புற விளையாட்டுகளான ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

உடற்பயிற்சிக் கூடம், ஆண், பெண்களுக்கு தனித்தனியாக அறைகள் மற்றும் கழிப்பறைகள், யோகா மையம், முதலுதவி சிகிச்சை மையம், பார்வையாளர்கள் அமரும் பகுதி, உணவுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய சர்வதேச தரத்தில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் அமைக்க நகராட்சி நிர்வாகத்துறையில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளது. இதனால் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com