சென்னையில் பாரா விளையாட்டு மைதானம்: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் பாரா விளையாட்டு மைதானம்: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
Published on

சென்னை,

பாரா-விளையாட்டுகளை (Para Sports) ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் சென்னையில் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்திலும் மற்றும் திருச்சி, மதுரை, கடலூர் திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய 6 மாவட்ட விளையாட்டரங்கங்களில் மொத்தம் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் நேரு பூங்கா வளாகத்தில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டிலும், இதர 5 மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.7.38 கோடி மதிப்பீட்டிலும் பாரா-விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, கீழ்பாக்கம் நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் பாரா பாட்மிட்டன் மைதனம் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அனைத்து பணிகளையும் தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிலும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

சென்னை, நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தைப் பொறுத்தவரை பாரா-விளையாட்டு மைதானமானது அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா இறகுப்பந்து ஆடுகளம், உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து ஆடுகளம், பாரா டேபிள் டென்னிஸ் ஆடுகளம், பாரா போச்சியா (Boccia) ஆடுகளம், பாரா டேக்வொண்டோ ஆடுகளம், பாரா ஜுடோ ஆடுகளம், பாரா கோல்பால் (Goal ball) ஆடுகளம், பாரா பளுதூக்குதல் பகுதி ஆகிய வசதிகளுடன், நிர்வாக அலுவலக கட்டடம், உபகரணங்கள் வைக்கும் அறை, சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வு தளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

அதே போன்று, திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் வரும் பாரா-விளையாட்டு மைதானம் அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து ஆடுகளம், பாரா போச்சியா (Boccia) ஆடுகளம், பாரா கோல்பால் (Goal ball) ஆடுகளம், பாரா பந்து எறிதல் ஆடுகளம் ஆகிய வசதிகளுடன், நிர்வாக அலுவலக கட்டடம், உபகரணங்கள் வைக்கும் அறை, சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வு தளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com