கொட்டும் மழையில் பறையிசைத்து நடனம் - சென்னை திருவிழா நிறைவு

கொட்டும் மழையில் பறையிசையுடன் கூடிய உற்சாக நடனத்துடன் சென்னை திருவிழா நிறைவு பெற்றது.
கொட்டும் மழையில் பறையிசைத்து நடனம் - சென்னை திருவிழா நிறைவு
Published on

சென்னை,

தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நட்பு, வணிகம், கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கல்லூரியில் 'சென்னை திருவிழா' நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழா, நேற்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது.

இந்த திருவிழாவில் சிறு, குறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள், தனித்துவம் வாய்ந்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக வணிக கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழகத்தின் அனைத்து விதமான பாரம்பரிய உணவுப் பொருட்கள், தினை உணவு பொருட்கள், நொறுக்குத் தீனிகள் ஆகியவையும் இங்கு இடம்பெற்றன.

இதுதவிர 100 வகையான மூலிகை செடிகளை கொண்ட கண்காட்சி, மருத்துவ முகாம், இசை, நடனம், கச்சேரி, கிராமிய விளையாட்டுகள், சிலம்பம், களறி அடிமுறை, மல்லம் போன்ற மரபுவழி வீர விளையாட்டுகளும் நடைபெற்றன.

இந்த திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பரத நாட்டியம் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியது. அதைத் தொடர்ந்து விட்டு விட்டு பெய்த மழையால் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து பறையிசை மற்றும் கரகாட்டக் கலைஞர்கள் ஆடத் தொடங்கிய போது கனமழை பெய்யத் தொடங்கியது. இருப்பினும் கொட்டும் மழையிலும் இடைவிடாது பறையடித்து, நடன கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடத் தொடங்கினர். மழைக்காக அருகில் இருந்த ஸ்டால்களில் ஒதுங்கியிருந்தவர்கள் நடன கலைஞர்களோடு சேர்ந்து நடனமாடத் தொடங்கினர். இதையடுத்து மழையுடன் கூடிய உற்சாக நடனத்துடன் சென்னை திருவிழா நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com