பரந்தூர் விமானநிலைய திட்டத்தை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
பரந்தூர் விமானநிலைய திட்டத்தை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் அழிக்கும் நோக்கில் அமையவிருக்கும் பரந்தூர் விமானநிலைய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

சென்னையின் இரண்டாவது விமானநிலையத்தை பரந்தூரில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்த நாளிலிருந்து 500 நாட்களுக்கும் மேலாக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு இதுவரை 6 முறை அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் தொடர் எதிர்ப்புகளை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்காக 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் விவசாயிகளும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலையில், 13 நீர்நிலைகளையும், ஏராளமான நீர்பிடிப்பு பகுதிகளையும் உள்ளடக்கி அமையவிருக்கும் பரந்தூர் விமானநிலையம், தொடர்ந்து வெள்ள பாதிப்பில் பொதுமக்களை சிக்கவைத்துக் கொண்டே இருக்கும் என நீரியல் நிபுணர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துள்ளனர்.

எனவே, தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, விளைநிலங்கள், நீர்நிலைகளை அழிக்கும் நோக்கில் அமையவிருக்கும் பரந்தூர் விமானநிலைய திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com