

சென்னை,
பரனூர் சுங்கச்சாவடியில் தடையில்லா தானியங்கி கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாஸ்டேக்கில் போதிய இருப்பு இல்லாவிட்டால் இருமடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் வாகனங்களுக்குப் பெரும் நெரிசல் மையமாக விளங்கிவந்த பரனூர் சுங்கச்சாவடியில், தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரத் தொழில்நுட்பம் மற்றும் பாஸ்டேக் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்ட புதிய சுங்கக் கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அங்குள்ள அனைத்து வழிகளிலும் இருந்த கட்டணத் தடுப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டன; சுங்கச் சாவடிக் கட்டட அமைப்பும் விரைவில் இடிக்கப்பட உள்ளது. இப்புதிய நடைமுறையினால், வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக நிற்க வேண்டிய அவசியம் இல்லாததால் தாம்பரம் திண்டிவனம் வழித்தடத்தில் குறைந்தது 15 நிமிடம் பயண நேரம் மிச்சமாகும்.
அதேசமயம், புதிய அமைப்பில் வாகனங்களை நிறுத்தி ஊழியர்கள் யாரும் கட்டண இருப்பைச் சரிபார்க்க மாட்டார்கள் என்பதால், வாகன ஓட்டிகள் தங்கள் பாஸ்டேக் கணக்கைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செயல்படாத பாஸ்டேக் வைத்திருக்கும் அல்லது போதிய இருப்புத் தொகை இல்லாத வாகனங்கள் சுங்கச் சாவடியைக் கடக்கும்போது, வழக்கமான கட்டணத்தைவிட இருமடங்காக, அதாவது 200 சதவீதக் கட்டணம் மின்னணு சலான் மூலம் விதிக்கப்படும். இவ்வாறு சலான் பிறப்பிக்கப்பட்ட உடனேயே சம்பந்தப்பட்ட வாகனத்தின் பாஸ்டேக் கணக்கு தானாகவே முடக்கப்படும்.
அந்த மின்னணு சலான் தொகையை 72 மணி நேரத்திற்குள் செலுத்தத் தவறினால், நான்காவது நாளில் அப்பழைய அபராதத் தொகை மீண்டும் இரட்டிப்பாக்கப்பட்டு அசல் கட்டணத்தில் 400 சதவீதமாக அதிகரிக்கப்படும். உதாரணமாக, ஒரு வாகனத்திற்கான சாதாரண சுங்கக் கட்டணம் ரூ.100 என்றால், போதிய இருப்பு இல்லாத பட்சத்தில் ரூ.200 மின்னணு சலான் பிறப்பிக்கப்படும்; அதனை 72 மணி நேரத்திற்குள் செலுத்தாவிட்டால் அத்தொகை ரூ.400 ஆக உயரும்.
மேலும், அபராதத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டதும், அந்த விபரம் மத்திய அரசின் வாகன் தளத்துடன் உடனடியாக இணைக்கப்படும் என்பதால், வாகனப் புதுப்பித்தல் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை சார்ந்த அனைத்து அரசு சேவைகளும் முடக்கப்படும் அபாயம் உள்ளது.
நீண்ட காலமாக நிலவி வந்த கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இது நல்ல தீர்வாக அமையும் என்பதால், குறிப்பாக வார இறுதி மற்றும் பண்டிகைக் காலங்களில் பேருந்துப் பயணிகளுக்குப் பெருமளவு பயனுள்ளதாக இருக்கும் எனப் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்னசமுத்திரம் (வாலாஜா) மற்றும் நெமிலி (ஸ்ரீபெரும்புதூர்) சுங்கச்சாவடிகளிலும் இத்தகைய சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அங்கும் இப்புதிய முறை பயன்பாட்டுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.