காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; ரெயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை - கர்ப்பிணி காதலி எடுத்த சோக முடிவு

கோகுல் அவரது நெஞ்சில் காதலி தரணியின் பெயரை பச்சை குத்தியிருந்தது போலீசார் ஆய்வின்போது தெரிய வந்தது.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; ரெயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை - கர்ப்பிணி காதலி எடுத்த சோக முடிவு
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மகன் நித்தின் என்கிற கோகுல் (வயது 20), பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதே கல்லூரியில் கோகுல் படித்த அதே வகுப்பில் ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அனுமுத்து என்பவரது மகள் தரணி (20) நர்சிங் படித்து வந்தார். தரணியின் தங்கையும் இதே வகுப்பில் படித்தார். இருவரும் இரட்டை குழந்தைகள்.

இந்நிலையில் கோகுல், தரணி ஆகியோர் ஒரே வகுப்பில் படித்த நிலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து காதலர்கள் பல இடங்களில் ஒன்றாக சுற்றினர். இதில் தரணி கர்ப்பிணியானார்.

கோகுலின் காதலை பெற்றோர் ஏற்காமல் எதிர்த்ததால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோகுல் பெங்களூருவில் இருந்து ரெயிலில் ஆம்பூருக்கு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கிடையில் தகவல் அறிந்த கோகுலின் காதலி கர்ப்பிணியான தரணி அதிர்ச்சி அடைந்தார். அவர் நேற்று அதிகாலை வாணியம்பாடி ரெயில் நிலையம் யார்டு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தார்.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடல் சிதைந்து பலியானார். தகவல் அறிந்து ரெயில்வே போலீசார் அங்கு சென்றபோது தரணியும், அவரது வயிற்றில் இருந்த 9 மாத ஆண் சிசுவும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கோகுலின் உடலை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, கோகுல் அவரது நெஞ்சில் காதலி தரணியின் பெயரை பச்சை குத்தியிருந்தது தெரிந்தது.

காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனும், கர்ப்பிணி காதலியும் தனித்தனியாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com