

அவினாசி,
நீலகிரி மாவட்டம் மீக்கேரியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38), என்ஜினீயர். இவரது மனைவி சுதா (36). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருக்கன்காட்டுபுதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்கள் அவினாசியில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். 2015-ம் ஆண்டு திருமணமான இவர்களுக்கு 10 மாதங்களே ஆன விவிதா, விகிதா என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர்.
செந்தில்குமார் சரியான வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன்பு கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு சுதா தனது கணவர், குழந்தைகளுடன் சென்று தங்கியிருந்தார்.
அங்கிருந்து நேற்று முன்தினம் அவர்கள் அவினாசிக்கு வந்தனர். இரவு செந்தில்குமாருக்கும், சுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. செந்தில்குமார், மேட்டுப்பாளையத்தில் உள்ள சுதாவின் தங்கை சுகிதாவை செல்போனில் தொடர்புகொண்டு சுதா தன்னிடம் சண்டை போடுவதாக கூறினார். அதற்கு சுகிதா தனது தாயாருடன் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை வருவதாகவும், அதுவரை இருவரும் அமைதியாக இருக்கும்படியும் கூறினார்.
சுகிதா நேற்று காலை சுதாவின் செல்போனை தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. செந்தில்குமாரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுகிதா தனது தாயாருடன் நேற்று காலை அவினாசிக்கு அவசரமாக புறப்பட்டு வந்தார். இருவரும் செந்தில்குமாரின் வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்தனர்.
அவினாசி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தபோது ஒரு அறையில் செந்தில்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர்.
அங்கு செந்தில்குமாரின் உடலுக்கு அருகே சுதாவும், மற்றொரு அறையில் இரட்டை குழந்தைகளும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
2 குழந்தைகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு அதன்பிறகு பெற்றோரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவந்தது. இதற்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது கடன் பிரச்சினை எதுவும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.