நாடாளுமன்றம் - சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்தது வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

தமிழகத்தில் நாடாளுமன்றம் - சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றம் - சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் பிரசாரம் ஓய்ந்தது வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் 845 பேரும், சட்டசபை இடைத்தேர்தலில் 269 பேரும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 ஆண்கள்; 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பேர் பெண்கள். 5,790 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆகும்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரத்தில் குதித்தனர். வீதி, வீதியாக வாகனத்திலும், நடந்து சென்றும் வாக்குகள் சேகரித்தனர்.

பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன், சீமான் ஆகியோர் இடைவிடாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நாளை (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே மாநிலம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியோடு முடிவுக்கு வந்தது.

இதன் பிறகு வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரசாரம் ஓய்ந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவுக் கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 720 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றத்துக்கு உரியவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அதோடு 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு வெப்கேம் மூலம் நேரடியாக உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். இதற் காக சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு எந்திரங்கள், 89 ஆயிரத்து 160 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 94 ஆயிரத்து 653 ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஒரு கம்பெனிக்கு 90 வீரர்கள் என்ற விகிதத்தில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் 63 ஆயிரத்து 951 போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர்களுடன் 27 ஆயிரத்து 400 ரிசர்வ் காவல் படையினர், 13 ஆயிரத்து 882 ஊர்க்காவல் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற ராணுவத்தினர், 14 ஆயிரம் என்.எஸ்.எஸ். படை பிரிவினர் பணியாற்றுவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com