அமலுக்கு வந்த நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை

வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அமலுக்கு வந்த நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை
Published on

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

பழனி அருகே அய்யம்பாளையம் பகுதியில் காரில் செங்கல் சேம்பருக்கு எந்தவித ஆவணமும் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தின் உரிமையாளர்கள் செங்கல் சூலைக்கு தொழிலாளிகளுக்கு ஊதியம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து திரும்ப பெற்றுச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

விருதுநகர் ஆமத்தூர் தனியார் கல்லூரி அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த கார் கம்பெனி டீலரான மதின்மணி என்பவர் இந்தப் பணத்தைக் கொண்டு சென்ற நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஓயாமேரி சஞ்சீவி நகர் அருகே தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த குழஞ்சியப்பன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டபோது, பி.கே. புதூரைச் சேர்ந்த வெங்காய வியாபாரி ராஜா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 750 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்த நிலையில் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com