நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட போவதாக சரத்குமார் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவிப்பதாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சரத்குமார் தெரிவித்தார். மேலும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர் அறிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு பிரசாரத்தில் ஈடுபட போவதாக சரத்குமார் அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேற்று காலை சென்ற சரத்குமார், அவரை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவினை தெரிவித்தார். பின்னர், வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- 2 நாட்களுக்கு முன்பு துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் எனது இல்லத்துக்கு வருகை தந்து, தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டில் இருந்து, நீங்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையிலும், அ.தி.மு.க.வில் உள்ள பல அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும், இயக்கத்தின் முடிவில் இருந்து மாறுபட, மீண்டும் உயர்மட்ட குழுவை கூட்டி மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசி, அவர்கள் ஆமோதித்ததன் அடிப்படையில் இன்று முதல்-அமைச்சரை சந்தித்து அ.தி.மு.க. கூட்டணிக்கு எங்களது ஆதரவை தெரிவித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை தந்திருக்கிறோம்.

நாங்கள் தேர்தல் அறிக்கையாக உருவாக்கியதை அவர்களிடம் தேர்தல் கோரிக்கையாக வைத்துள்ளோம். இந்த தேர்தலில் அ.தி.மு.க. அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபடுவேன். எனது கோரிக்கைகளில் சமத்துவம் நிலைநாட்டவும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற நிலைபாட்டை எடுத்து தாங்கள் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே எங்கள் ஆதரவை உங்களுக்கு தருகிறோம் என வலியுறுத்தி இருக்கிறோம். பிரசாரம் செய்வது என்று முடிவு எடுத்தபிறகு அது பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. வேட்பாளர் என பிரித்து பார்க்கவில்லை. இந்த கூட்டணி வெற்றி பெற நீங்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் என்னை சந்தித்து எங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அவர்களுக்காக பிரசாரம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com