நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்குமா? திருநாவுக்கரசர் பதில்

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்குமா? என்பது குறித்து திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்குமா? திருநாவுக்கரசர் பதில்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தெலுங்கானாவில் மெகா கூட்டணி அமைத்தும், காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியாதது ஏன்?

பதில்:- தெலுங்கானா மாநிலம் உருவாக காரணம் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் தான். ஆனால் தன்னால் தான் அந்த மாநிலம் உருவானது என்ற எண்ணத்தை சந்திரசேகரராவ் மக்களிடம் பதிய வைத்து இருக்கிறார். மிகப்பெரிய பணபலத்தை பின்னணியாக கொண்டிருக்கும் அவர், தேர்தல் சமயத்தில் பணத்தை தண்ணீராக வாரி இறைத்தார். இதன் காரணமாக அவர் அங்கு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இருக்கலாம்.

கேள்வி:- 5 மாநில தேர்தலில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து உள்ளதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கேட்குமா?

பதில்:- எங்களை பொறுத்தவரையில் எத்தனை இடம், எந்தெந்த தொகுதிகள் என்பதை உரிய நேரத்தில் பேசுவோம்.

கேள்வி:- கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க 16-ந்தேதி சென்னை வரும் சோனியாகாந்திக்கு எவ்வாறு வரவேற்பு அளிக்கப்படும்?

பதில்:- சென்னை விமானநிலையத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரை வழிநெடுகிலும் மனிதசங்கிலி போன்று நின்றும் இசை, வாத்தியங்கள் முழங்கவும் மிகப்பிரமாண்ட முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாய்ப்பு கேட்டால் தரப்படுமா?

பதில்:- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மட்டும் இல்லை, யார் வேண்டும் என்றாலும் சீட் கேட்கலாம். முடிவு செய்வதற்கு கமிட்டி இருக்கிறது. ராகுல்காந்தி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராணி, மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com