நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவா? சரத்குமார் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்குமா? என்பது குறித்து சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவா? சரத்குமார் பேட்டி
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு கொடுக்கும் நிவாரணம் போதாது. புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். 50 மைக்ரானுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்கான முறையை கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் ச.ம.க. தனித்து போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளேன். 234 தொகுதி வேட்பாளர் அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ஜனவரி 14-ந் தேதிக்கு மேல் உயர்மட்ட குழு கூட்டம் இருக்கிறது. அதில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தலினால் மேலும் வரிப்பணம் செலவாக வேண்டாம் என்பது எனது எண்ணம்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்ப்போம். அதனால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருப்பீர்களா? என்று சிலர் கேட்கின்றனர். அது பற்றி சிந்திக்கவில்லை. தி.மு.க. எனக்கு பிடிக்கவில்லை. பிரதமரை சேடிஸ்ட் என்று கூறுவது தவறு. அது பெரிய வார்த்தை.

காசு வாங்காமல் ஓட்டுபோடும் மக்களால்தான் மாற்றம் வரும். மூன்றாவது கூட்டணி வந்தால், நாட்டை பற்றியும், மக்களை பற்றி சிந்தித்து முடிவு எடுக்கப்படும்.

மேகதாது அணை விவகாரத்தில் இரண்டு முதல்-அமைச்சர்களும் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி ஒருவர் ஒருபக்கம் சாய்ந்திருப்பது தவறான ஒன்று.

கலையுலகத்தை ஒதுங்கி இருந்து கொண்டு நான் பார்த்து கொண்டிருக்கிறேன். அதற்கான சங்கம் உள்பட எதுவாக இருந்தாலும் ஜனநாயக ரீதியில் நடக்க வேண்டும். இந்த பிரச்சினைகளை உட்கார்ந்து பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com