நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாயக கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

சென்னை,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து, அச்சுறுத்திய இருவரின் அடையாளம் தெரிந்தது. அவர்கள் மைசூரை சேர்ந்த மனோரஞ்சன், சாகர் ஷர்மா என டெல்லி காவல்துறை தெரிவித்திருக்கிறது. கர்நாடக பாஜக எம்.பி. வழங்கிய அனுமதி சீட்டில் இருவரும் உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதேபோல் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த நீலம் (வயது 42), மராட்டிய மாநிலம் லத்தூர் பகுதியைச் சேர்ந்த அமோல் ஷிண்டே (வயது 25) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாயக கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது.

தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடி விசாரணையைத் தொடங்கவும், பொறுப்புக்கூறலைச் சரிசெய்யவும், எதிர்காலத் தவறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை நம்முடைய கட்டளையின்படி, அனைத்து வலிமையுடன் உறுதிப்படுத்தவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com