“ஆட்சியில் பங்கு.. உரிய நேரத்தில் முடிவு..” - திருமாவளவன்

கோப்புப்படம்
எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முடியாமல் சிதறி கிடப்பதாக திருமாவளவன் கூறினார்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் உறுதியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகாத நிலையில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவோம் என்று அன்புமணி கூறுவது நகைப்புக்குரியது.
கூட்டணி ஆட்சியில் பங்கு குறித்து உரிய நேரத்தில், முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவோம். திமுக கூட்டணிக்கு பாமக வரும் என்ற யூகத்துக்குப் பதில் சொல்ல முடியாது. நர்சுகள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். தமிழக முதல்-அமைச்சரும் அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். சமூக நீதி, பெரியார், அம்பேத்கர் மார்க்சிய அரசியலே எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண்டாம்பட்சம்தான்.
மதவாத சக்திகளை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள், அமைப்புக்கள் துணை போகின்றன. தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சி இந்தளவிற்கு ஆட்டம் போட காரணமே அ.தி.மு.க. தான். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அ.தி.மு.க. இல்லாமல் போய்விடும். சனாதன சக்திகளுக்கு துணை போகும் வகையில் சீமானும், விஜய்யும் செயல்படுகிறார்கள். இதனை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ மக்கள் மீதான தாக்குதல் பற்றி இதுவரை விஜய் வாய் திறந்து உள்ளாரா? பா.ஜனதா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தபோது, மதவாத அரசியலை பேசக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து தான் கலைஞர் கூட்டணி வைத்தார். கூட்டணி வைத்திருந்தபோதும் கருணாநிதி கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது அ.தி.மு.க.வினர் பா.ஜனதா கட்சியின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






