

சென்னை,
கட்சி வளர்ச்சி பணி குறித்து திமுக மறுசீரமைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தை இழந்தது. முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் வெற்றிவாய்ப்பை இழந்தனர்.
இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சக்கரபாணி, கீதா ஜீவன் உள்பட 10 நிர்வாகிகள் அடங்கிய மறுசீரமைப்பு குழுவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்தார்.
இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகளை மு.க.ஸ்டாலினிடம் கடந்த ஆகஸ்டு மாதம் சமர்ப்பித்தனர். இந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
தி.மு.க. அமைப்புரீதியான மாவட்டங்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. தி.மு.க.வில் அமைப்புரீதியாக 25 அணிகள் இயங்கி வருகிறது. இந்த சார்பு அணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மறுசீரமைப்பு குழுவினர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. சிறுபான்மை நலப்பிரிவு அணி, வர்த்தகர் அணி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்த குழுவினர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட விவரங்கள் குறித்து தகவல் தெரிவித்தனர். அப்போது மு.க.ஸ்டாலின், இந்த குழுவினருக்கு சில ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.