விஜய் பேச்சுக்கு பதிலளிக்க கூடாது என கட்சி தலைமை கட்டளை; அமைச்சர் காந்தி

யாராலும் நமது முதல்-அமைச்சரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி கூறினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம், ஓர் அணியில் தமிழ்நாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் சங்கர மடம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி பேசியதாவது:-
யார் யாரோ(நடிகர் விஜய்) ரோட்டுக்கு வந்து என்னென்னவோ பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அமைச்சர்கள் பதில் சொல்லக்கூடாது என தலைமை எங்களுக்கு கட்டளையிட்டுள்ளது. ஆனால் யாராலும் நமது முதல்-அமைச்சரை தொட்டுகூட பார்க்க முடியாது. மக்கள் மத்தியில் அவர் செய்த வளர்ச்சி திட்டங்கள் காரணமாக எம்.ஜி.ஆருக்கும் அப்பாற்பட்ட அளவில் மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்துள்ளார்.
நாம் ஒற்றுமையுடன் இருந்தால் 2026-ம் ஆண்டு தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார். நடிகர் விஜய்யைதான் அமைச்சர் காந்தி, இதுபோல் பெயர் குறிப்பிடாமல் மறைமுக தாக்கி பேசினார்.






