

சென்னை,
த.வெ.க. நிகழ்ச்சியை பள்ளிக்கூடத்தில் நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு என்றும், கட்சி நிகழ்ச்சிகளை அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காண்பிக்க கூடாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கரூரில் முதல்-அமைச்சர் விஜய் நேற்று கலந்துகொண்ட கட்சி சார்ந்த நிகழ்ச்சி பள்ளி ஒன்றின் வகுப்பறையில் 'ஸ்மார்ட்' போர்டு வாயிலாக ஒளிபரப்பப்பட்டது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இந்த விவகாரத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பள்ளிக்கல்வித் துறை உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் த.வெ.க. நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்டது தவறு. சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் அரசு பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக்கூடாது.
இதுதொடர்பாக பள்ளி கல்வி, தொடக்க கல்வி, தனியார் பள்ளிகள் ஆகிய 3 துறைகளின் இயக்குனர்கள் கூட்டாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிகளில் சாதி. மத. அரசியல் சார்ந்த நிகழ்வுகளைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.