தர்மபுரியில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் 2 அடுக்கு நவீன பயணிகள் நிழற்கூடம்

தர்மபுரியில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் 2 அடுக்கு நவீன பயணிகள் நிழற்கூடம்
Published on

தர்மபுரி:

தர்மபுரியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் 2 அடுக்கு நவீன பயணிகள் நிழற்கூடத்தை கலெக்டர் சாந்தி திறந்து வைத்தார்.

பயணிகள் நிழற்கூடம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன 2 அடுக்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு செந்தில்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய 2 அடுக்கு பயணங்கள் நிழற்கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய குளிர்சாதன 2 அடுக்கு பயணிகள் நிழற்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கலெக்டர் அலுவலகம் வரும் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள், அரசு கலைக்கல்லூரி வந்து செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்று கூறினார்.

சிறப்பு அம்சங்கள்

இந்த நவீன பயணிகள் நிழற்கூட தரைத்தளத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகளுக்கு இருக்கை வசதி, காத்திருப்பு அறை, சிறப்பு அங்காடி, ஏ.டி.எம். வசதி உள்ளிட்டவையும், முதல்தளத்தில் குளிர்சாதன வசதியுடன் பாதுகாக்கப்பட்ட தாய்-சேய் பாலூட்டும் அறை, மினி நூலகம், படிப்பு அறை, இருக்கை வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களும், மேலும், 24 மணி நேர கண்காணிப்பு கேமரா, வைபை வசதி, தர்மபுரி பண்பலை ரேடியோ ஒளிபரப்பு, தொலைக்காட்சி, செல்பி பாயிண்ட், கார்டன் சிட் அவுட், கைப்பேசி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமையப்பெற்றுள்ளது. இந்த திறப்பு விழாவை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அந்த பயணிகள் நிழற்குடையை பார்வையிட்டனர்.

இந்ந நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தி.மு.க. மாநில நிர்வாகிகள் தர்மசெல்வன், சத்தியமூர்த்தி, சூடப்பட்டி சுப்பிரமணி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com