ராமேசுவரத்தில் இருந்து மின்சார என்ஜினில் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கம்

ராமேசுவரத்தில் இருந்து மின்சார என்ஜினில் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
ராமேசுவரம்,
ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே 53 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்வழி ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று நிறைவடைந்தன. கடந்த 20-ந் தேதி முதல் சென்னை, திருப்பதி, ஓகா, சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலம் ராமேசுவரம் வரை இயக்கப்பட்டு வருகின்றன.
ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திருச்சிக்கு பாசஞ்சர் ரெயில்கள் டீசல் என்ஜின் ரெயில்களாகவே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த ரெயில்களும் மின்சார ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி நேற்று முதல் ராமேசுவரத்தில் இருந்து மதுரை, திருச்சிக்கு செல்லும் பாசஞ்சர் ரெயில்களானது மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. மின்சார ரெயில்களாக இயக்கப்படுவதால் ரெயிலின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில் பயணம் நேரம் குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே கடல் நடுவே உள்ள பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் செல்லும் மின்கம்பிகள் மீது கடல் காற்றால் உப்பு படிந்துள்ளதாகவும், மின்சார ரெயில்கள் செல்லும்போது அவ்வப்போது லேசான உராய்வு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே மண்டபத்தில் இருந்து இதற்குரிய சிறப்பு மின்சார என்ஜின் கொண்டு வரப்பட்டு, பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் மின் கம்பிகள் மீது படிந்துள்ள உப்பு படிவத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது.






