

நெல்லை,
திருச்செந்தூர்-சென்னை இடையே தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இருமார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறை கதவில் அதிக இடைவெளி இருப்பதாக கூறி பயணிகள் குற்றம்சாட்டி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
அந்த வீடியோவில், "ரெயில் கழிவறை கதவில் அதிக இடை வெளி இருப்பதால் அதனை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பெண்கள் கழிவறைக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே கழிவறையை முழுமையாக மறைக்கும் வகையில் கதவு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கழிவறை கதவுகளை முறையாக அமைக்க வேண்டும். அப்போது தான் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் கழிவறைகளை அச்சமின்றி பயன்படுத்தும் நிலை ஏற்படும். எனவே ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பயணிகளின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.