நெல்லை ரெயில், பஸ் நிலையங்களில் 2-வது நாளாக பயணிகள்கூட்டம் அலைமோதியது

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர் சென்ற பயணிகளால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை ரெயில், பஸ் நிலையங்களில் 2-வது நாளாக பயணிகள்கூட்டம் அலைமோதியது
Published on

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர் சென்ற பயணிகளால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் இருந்து ஏராளமானோர் நெல்லை மற்றும் தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு வந்திருந்தனர்.

அவர்கள் குடும்பத்தினர், உறவினருடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடினார்கள். மேலும் பெரும்பாலானோர் தங்கள் குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பயணிகள் கூட்டம்

இந்தநிலையில் நேற்று சொந்த ஊரிலிருந்து தங்கள் பணியாற்றும் மற்றும் தொழில் செய்யக்கூடிய வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர். இங்கிருந்து மதுரை மற்றும் வெளியூர்களுக்கு சென்ற பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் சென்னை, கோவை, திருச்சி மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு நேற்று இயக்கப்பட்டன. பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பயணிகளை வரிசையில் நிற்க செய்து பஸ்களில் ஏற்றி அனுப்பினார்கள்.

ரெயில் நிலையம்

இதைப்போல் நெல்லையில் இருந்து சென்னை, மும்பை, கோவை செல்லுகின்ற ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இந்த ரெயில்களில் செல்வதற்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

செங்கோட்டை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பாங்கல் பண்டிகை கொண்டாட வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மக்கள் நேற்று மீண்டும் வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதுபோல் கொல்லம்-சென்னை செல்லும் ரெயிலிலும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com