செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்

செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர். இதனால் 2 மணிநேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்
Published on

சென்னை,

சென்னை சென்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் செவ்வாப்பேட்டை ரோடு ரெயில் நிலையம் உள்ளது. ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் உள்ள இந்த ரெயில் நிலையத்தில் 2015-ம் ஆண்டு ரூ.20 கோடியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடந்துவந்தது. அதன்பிறகு அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டது. தற்காலிகமாக செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பாதை அமைத்து கொடுத்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த பாதையில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர். அதையும் ரெயில்வே அதிகாரிகள் தடுப்புகள் அமைத்து தடுத்து விட்டனர்.

ரெயில் மறியல் போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகள், நேற்று மாலை 5 மணி அளவில் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் வந்த புறநகர் மின்சார ரெயிலை மறித்து தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரை செல்லும் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 7 மணியளவில் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மின்சார ரயில் போக்குவரத்து சீரானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com