மங்களூரு-நெல்லை வாராந்திர ரெயில் நேரத்தை மாற்ற வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மங்களூரு-நெல்லை வாராந்திர ரெயில் நேரத்தை மாற்ற வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்
Published on

மதுரை,

மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட நெல்லையில் இருந்து மதுரை வழியாக மங்களூருவுக்கு இயக்கப்படும் வாராந்திர ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாராந்திர ரெயில்கள்

பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் தமிழகத்துக்கு பாலக்காடு-பொள்ளாச்சி மெமு ரெயில், மயிலாடுதுறை-காரைக்குடி பாசஞ்சர் ரெயில், போத்தனூர்-தன்பாத் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில்-சரளப்பள்ளி அம்ரித்பாரத் ரெயில் உள்பட புதிய ரெயில்களை அறிமுகம் செய்தார். அத்துடன், மதுரை கோட்டத்தில் ராமேசுவரம்-மங்களூரு மற்றும் நெல்லை-மங்களூரு ஆகிய ரெயில்களையும் தொடங்கி வைத்தார். இந்த ரெயில்கள் முறையே கடந்த மார்ச் மாதம் 19 மற்றும் 22-ந் தேதி களில் இருந்து இயக்கப்படுகின்றன.

இதில், நெல்லை-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 16708) புதன்கிழமைகளில் நெல்லையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மங்க ளூரு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16707) வியாழக்கிழமைகளில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

அதேபோல, ராமேசுவரத்தில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.16621) ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண். 16622) மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை7.50 மணிக்கு மதுரை வந்தடைகிறது. காலை 10.50 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது.

நேர மாற்றம்

இதற்கிடையே, மங்களூருவில் இருந்து வியாழக்கிழமைதோறும் நெல்லைக்கு இயக்கப்படும் ரெயில் நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதாவது, இந்த ரெயில் (வ.எண். 16707) மங்களூருவில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு சொரனூர் ரெயில் நிலையம் வந்தடைகிறது.

அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு 44 கி.மீ. தூரத்தில் உள்ள பாலக்காடு ரெயில் நிலையத்தை இரவு 9.45 மணிக்கு சென்றடைகிறது. ஒரு மணி நேரத்திற்குள் பாலக்காடு ரெயில் நிலையம் சென்றாலும் அங்கு சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அத்துடன் ஒட் டன்சத்திரம் ரெயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் வரையிலான 32 கி.மீ. தூரத்தை வந்தடைய ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

இதனால் இந்த ரெயில் சுமார் 3 மணி நேரம் காலதாமதமாக இயக்கப்ப டுகிறது. அதற்கு பதிலாக இந்த ரெயிலை நெல்லை ரெயில் நிலையத் துக்கு அதிகாலை 5.30 மணிக்குள் சென்றடையுமாறு இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை-மங்களூரு இடையே உள்ள 751 கி.மீ.தூரத்தை சுமார் 19 மணி நேரத்தில் கடக்கிறது. வழியில் 21 ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. ஆனால், நெல்லையில் இருந்து செல்லும் போது இதே ரெயில் 15 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்கிறது. எனவே, இரு மார்க்கங்களிலும் ஒரே நேரத்தில் சென்றடைவதற்கு ஏற்ப இந்த ரெயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

அதேபோல, நெல்லையில் இருந்து மதுரை வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com