

சென்னை
ஜார்கண்ட் முதல்-மந்திரியின் தாயார் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
ஜார்கண்ட் முதல்-மந்திரி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் தலைவராக இருப்பவர் ஹேமந்த் சோரன். இவருடைய தாயார் ரூபி சோரன். ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் நிறுவனரான சிபு சோரனின் மனைவியான ரூபிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் பலனின்றி நேற்று இரவு 8.30 மணியளவில் காலமானார்.
அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைத்தள பதிவில், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் தாயார் ரூபி சோரன் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
இத்துயர்மிகு வேளையில் ஹேமந்த் சோரன் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மறைந்த ரூபி சோரன் உடனான நினைவுகளை நெஞ்சில் ஏந்தி இதனை கடக்கும் மனவலிமையையும் இளைப்பாறுதலையும் அவர்கள் பெற விழைகிறேன் என தெரிவித்து உள்ளார்.