

மைசூரு
பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவை அடுத்து அவருடைய உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் திரளாக சென்று வருகின்றனர்.
இந்திய சினிமாவின் பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 88. ஜானகியம்மா, கான கோகிலா, தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், இசை அரசி என்று பல்வேறு பட்டங்களில் புகழப்படும் எஸ்.ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா கிராமத்தில் பிறந்த எஸ். ஜானகி, சிறுவயதில் இருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் ஓராண்டு காலம் முறையாக இசைப்பயிற்சி பெற்றவர். தனது மாமாவின் ஆலோசனையின்பேரில் சென்னைக்கு குடிபெயர்ந்த அவர், ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பின்னணி பாடகியாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
1957-ம் ஆண்டு வெளியான 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் 'பெண் என் ஆசை பாழானது ஏனோ...' என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மறுநாளே தெலுங்கு படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 'எம்.எல்.ஏ.' என்ற படத்தில் 'நீயாசா அடியார்...' என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடி தெலுங்கு சினிமாவிலும் அடியெடுத்து வைத்தார்.
1957 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், ஜானகி தனது தனித்துவமான குரலால் பல தலைமுறை இசையமைப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பாடல்களுக்கு உயிரூட்டினார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாதவை. தனது தாய்மொழியான தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஒடிசா, பெங்காலி, மராத்தி, துளு, உருது, குஜராத்தி, பஞ்சாபி, கொங்கனி, அசாமி, சிந்து, ஆங்கிலம், ஜப்பான், அரபு, ஜெர்மன், சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல பக்தி பாடல்களை தானே எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.
ஜானகியின் அசாத்திய குரல் திறமைக்காக எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 4 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். இதன்படி 1976-ல் பதினாறு வயதினிலே படத்தின் செந்தூரப்பூவே, 1980-ல் மலையாள படத்தின் எட்டுமனூரம்பழத்தில், 1984-ல் தெலுங்கு படத்தின் வெண்ணெல்லோ கோதாரி அந்தம், 1992-ல் தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகா ஆகிய பாடல்களுக்காக நான்கு தேசிய விருதுகளை வென்றார்.
தமிழகம், கேரளம், கர்நாடகா போன்ற பல்வேறு மாநில அரசுகளின் திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். 1992-ல் இலங்கையில் அவருக்கு "ஞான கான சரஸ்வதி" என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.
எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, கங்கை அமரன், தேவா, ஏ.ஆர். ரஹ்மான், வித்யாசாகர், எஸ்.ஏ. ராஜ்குமார், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களை பாடினார்.
2016-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய எஸ்.ஜானகி மைசூருவில் தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். மருமகள் உமா மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மைசூருவிலேயே ஜானகி வசித்து வந்தார்.
தனது ஒரே மகன் இறந்த துயரத்தில் இருந்த ஜானகியை உடல் நலக்குறைவும் பற்றிக்கொண்டது. கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடையவே உடனடியாக மைசூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவருடைய மறைவு இந்திய திரையிசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.
அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவால், இந்தியா ஒரு இசைச் சிகரத்தை இழந்துள்ளது. அவரது அபாரமான குரல்வளம் பல தலைமுறையினரை மெய்சிலிர்க்க வைத்தது. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது சிறப்பான இசைப் பயணத்தில், இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி மற்றும் பெங்காலி உள்ளிட்ட சுமார் 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார்.
காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாக திகழும். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அவரது அசாதாரணக்குரல் இந்திய இசையை வளப்படுத்தி, தலைமுறைகள் கடந்து எண்ணற்ற இதயங்களை தொட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களால் 6 தசாப்தங்களுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்தார். அவர் பாரம்பரிய, பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களில் சமமான தேர்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஜானகியின் மறைவு இசை உலகத்துக்கும், தேசத்தின் கலைப்பாரம்பரியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினர், அபிமானிகள் மற்றும் ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு, இசை மற்றும் கலாசார உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். பல்வேறு மொழிகளில் அமைந்த அவரது பாடல்கள், தலைமுறை தலைமுறையாக பிரபலமாக இருந்தன. அவை, ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்விற்கும் குரல் கொடுத்தன.
அவரது மெல்லிசை, வரும் ஆண்டுகளிலும் கேட்போரைத்தொடர்ந்து வசீகரிக்கும். இந்த துயர நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இந்திய திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, இசை உலகில் அழியாத முத்திரையை பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உள்பட எண்ணற்ற உயரிய விருதுகளை பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக்கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த்ரெட்டி வெளியிட்ட இரங்கல் பதிவில், 'ஜானகியின் மறைவு இந்திய திரையுலகுக்கு மட்டுமல்ல, கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார். ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன், கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவரான மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, அனிருத், இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தமிழ் குமரன் உள்ளிட்ட திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவருடைய உடல் மகாராஜா கல்லூரி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், ரசிகர்கள் இன்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.