அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது: கமல்ஹாசன்

அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன் என கமல்ஹசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசினர் தனி தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார்.

பேரவை வலியுறுத்துகிறது

காவிரி பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எந்த வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது.

அறிக்கை

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இந்த பேரவை வலியுறுத்துகிறது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அதனைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசினார்கள். நிறைவாக, மேகதாது அணைக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேகதாது அணை விவகாரத்தில் சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்த முதல்-அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பாராட்டுக்குரியது

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தன்னிச்சையாக முனையும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் தனித்தீர்மானத்தை கொண்டு வந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.

மனதார பாராட்டுகிறேன்

தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com