

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற நான் முதல்வன் திட்ட வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் ஆற்றிய உரை.
முதல்-அமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வில் வெற்றி பெற்றுள்ள உங்கள் அனைவரையும் வரவேற்பதிலும், வாழ்த்துவதிலும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இன்றைக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் எந்த அளவுக்கு முடிவுகளை (results) கொடுத்திருக்கிறது என்பதை நம் கண்கள் முன்பாகவே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதிலும் இந்த ஆண்டு ஒரு கூடுதல் சிறப்பு என்னவென்றால், அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் வந்திருக்கிறீர்கள். அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்ற தங்கை ராஜேஸ்வரி சுவே அவர்களுக்கும், ஏழாம் இடம் பெற்ற தம்பி ராஜா மொகைதீன் உள்ளிட்ட 56 பேருக்கும் எங்களின் வாழ்த்துக்களை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் நம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் உங்களால் இன்று தமிழ்நாட்டு இளைஞர்களிடம் அதிகமாகி இருக்கின்றது. அந்த ஆர்வம் அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கான பொருளாதாரம்தான் மிகப்பெரிய தடையாக இருந்தது.
ஆகவே, யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிக்கின்ற மாணவர்களின் கனவை நனவாக்க, அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற வகையில், ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுப் பிரிவு என்கின்ற ஒரு தனிப் பிரிவை நம் முதல்-அமைச்சர் 2023-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ், 1,000 மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்கள் முதல்நிலைத் தேர்வுக்குப் படிக்க மாதம் 7,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்து முதன்மைத் தேர்வுக்குப் படிக்கின்ற மாணவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக (One-time grant) 25,000 ரூபாய் வழங்கப்படுகிறது. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்து நேர்முகத் தேர்வுக்கு செல்வோருக்கு 50,000 ரூபாயும் ஊக்கத் தொகையாக நம் அரசு வழங்குகிறது. இதோடு சேர்த்து யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு (UPSC aspirants) தங்கிப் பயிலும் பயிற்சி மைய வசதியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதனால் சென்னையில் இருக்கின்ற மாணவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லாப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். நம்முடைய முதல்-அமைச்சர், உங்களின் பெற்றோர்களின் இடத்திலிருந்து நமது ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாக உங்களுக்குப் பக்கபலமாக, உறுதுணையாக இருக்கிறார்கள்.
இப்போது தமிழ்நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிக்கின்ற ஆர்வம் இளைஞர்களிடம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைய பேர் ‘நான் முதல்வன்’ கல்வி உதவித்தொகைக்கான தகுதித் தேர்வை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களிடம் இந்த ஆர்வத்தை உண்டாக்கியதுதான் இந்தத் திட்டத்தின் முழுமையான, முதன்மையான வெற்றி.
முன்பெல்லாம் யு.பி.எஸ்.சி தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்றால் நிறைய பேர் டெல்லிக்குச் செல்ல வேண்டும். ஆனால் ‘நான் முதல்வன்’ திட்டம் வந்த பிறகு,
டெல்லிக்குச் சென்று படித்தவர்கள் கூடத் தமிழ்நாட்டிலேயே படிக்கலாம் என்று இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லா வகையிலும் யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். டெல்லியில் இருக்கக்கூடிய தனியார் பயிற்சி மையங்களை விடச் சிறப்பான பயிற்சிகளை நம் அரசு சார்பாக வழங்கி வருகிறோம்.
எனவே, தமிழ்நாட்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 100 பேராவது யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கின்ற இலக்கை வைத்து நம் துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த, குறிப்பாகக் கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வர வேண்டும். இதுதான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கண்ட கனவு. அந்த கனவுக்கு நம் முதல்-அமைச்சர் இன்றைக்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலமாகத் தேர்வாகி இருக்கக்கூடிய 56 வெற்றியாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் எதிர்காலத்தில் மிக உயரிய பதவிகளுக்குச் செல்லப் போகிறீர்கள். முக்கியமான துறைகளை எல்லாம் நிர்வாகம் செய்யப் போகிறீர்கள். உங்களின் பதவிகளை, அதிகாரங்களைச் சாமானிய மக்களை உயர்த்தி விடப் பயன்படுத்துங்கள் என்று உங்களை எல்லாம் உரிமையோடு, அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.