

சென்னை,
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:
நான் வக்கீலாகவும், புகைப்பட கலைஞராகவும், விரிவுரையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருந்து வருகிறேன். வடஇந்தியாவில் உள்ள நாட்டின் எல்லை பகுதியோரம் பயணம் செய்து, பல தகவல்களை ஆவணம் செய்தேன். பின்னர், பாடர்லைன் (எல்லைக்கோடு) என்ற தலைப்பில், புத்தகம் ஒன்றை எழுதியுள்ளேன். இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஹச்சட்டே புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் ஆசிரியர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என்னை தொடர்புகொண்டு, நான் எழுதியுள்ள புத்தகத்தை வெளியிட விரும்புவதாக கூறினார். ஆனால், நான் வேறு புத்தக வெளியீட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால், அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து, பாடர்லைன் என்ற பெயரில் பிரதீப் தாமோதரன் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தை ஹச்சட்டே வெளியீட்டு நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது. நான் என்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ள பல தகவல்கள், அதில் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த புத்தகம் வெளியானால், எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், பிரதீப் தாமோதரன் எழுதியுள்ள பாடர்லைன் புத்தகத்தை வெளியிட ஹச்சட்டே வெளியீட்டு நிறுவனத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், பிரதீப் தாமோதரன் எழுதியுள்ள பாடர்லைன் புத்தகத்தை வெளியிட ஹச்சட்டே வெளியிட்டு நிறுவனத்துக்கு 4 வாரத்துக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.